நட்புக்காலம் 1

ஈராயிரமாவது ஆண்டின் நடுப்பகுதி.
கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடிப் புறப்பட்டேன்.

மாநகரத்தின் மகா நெரிசலுக்குள் மூச்சுத் திணறி மனம் நொந்த வேளை.

“அறிவுமதியின் கவிதைகள்” கண்ணில் பட்டது.
வாசிக்க வாசிக்க என்னை யோசிக்க வைத்தது.
பின்னர் படிப்படியாய் அவரை நேசிக்க வைத்தது.

கிராமமா? நகரமா? என்று பகுத்துணர முடியாத ஊரில் பிறந்து வளர்ந்தவன். அம்மா,அக்கா, அண்ணி இவர்களை விட்டால் பெண் சினேகிதம் என்பதை மருந்துக்குக் கூட எண்ணிப் பார்க்க முடியாது என்னால் அப்போது?

மாநகர வாழ்க்கையில், கூட்டுப் புழுக்களாய் இருந்தவை எல்லாம் ஒரே நேரத்தில் வண்ணத்துப் பூச்சிகளாய் உருமாறி வண்ணக் கனவுகளை விதைத்தன என் மனதில்.

கனவுகள் கரை சேர்க்குமா? காலை வாரி விடுமா? பகுத்துணரத் தெரியவில்லை அப்போது?

புத்தனுக்கொரு போதி மரம். எனக்கொரு மெரினா கடற்கரை.

வேடிக்கை பார்க்கப் போவது எனக்குள் உற்சாக ஊற்றைப் பிரவகிக்கச் செய்யும்.

துள்ளி எழும் துளி நீர் மெள்ள அடங்கிய பிறகு மனசு ஆழ்கடல் போல் அமைதி கொள்ளும்.

இமைகளும் இதயமும் ஒருமித்த அலைவரிசையில் சஞ்சரிக்கும் வேளையில் கையிலிருக்கும் நட்புக்காலத்தை விரிப்பேன்.

அண்ணன் அறிவுமதி என் தோள்களின் இருமருங்கிலும் புதிய இறக்கைகளைப் பூட்டி விடுவார்.

அப்புறமென்ன எனக்கே எனக்கான வானில் தனியனாய்ச் சுற்றித் திரிவேன்.

நட்பின் குறுக்கு வெட்டு, நெடுக்கு வெட்டுத் தோற்றங்களை ஆழமாய் அழகாய் அள்ளித் தந்திருப்பார் நட்புக்காலத்தில் அறிவுமதி. என்னைப் பக்குவப்படுத்திய புத்தன் அவர் தான்.

இதோ நட்புக்காலம்.

உங்கள் பார்வைக்கு…..

1) உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல வரிகள்
தேடித்தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என் கவிதை.

2) நீ வயசுக்கு
வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள் நீ.

3) உன்னுடன்
சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகு தான்
சாலை ஓர
மரங்களிலிருந்து
உதிரும் பூக்களின்
மௌனத்திலும்
இசை கேட்க
ஆரம்பித்தேன்
நான்.

4) கண்களை
வாங்கிக் கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்.

கண்களை
வாங்கிக் கொண்டு
உன்னைப் போல்
கண்கள் தருகிறவள் தான்
தோழியாகிறாள்.

5) எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்.

உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்.

அதனால் தான்
நட்பு
நம்மைத்
தேர்ந்தெடுத்திருக்கிறது.

6) ஒரு ஞாயிற்றுக்கிழமை
மதியத்தில்
தாமதமாய் வந்து
என்னை எழுப்பாமலேயே
நீ சொல்லியபடி
நான்
சமைத்து வைத்திருந்த உணவை
நிதானமாகச் சாப்பிட்டுவிட்டு
என் பக்கத்திலேயே
படுத்துத் தூங்கிவிட்டும்
போயிருக்கிறாய்
என்பதைச்
சொல்லிப் பரிகசித்தன
என் தலையணையில்
சில மல்லிகைகள்.

3 Comments on நட்புக்காலம் 1

 1. வாசித்து யோசித்து நேசிக்கின்ற
  வகை கண்ட என் இனிய இளைய
  நண்ப
  யாசித்து நின்றார்கள் அனைவருக்கும்
  எல்லாமே தந்து நின்ற தமிழாம்
  தாயும்
  வாசிக்கும் உம்மோடு வாழ்ந்து நிற்பாள்
  வகை வகையாய் யோசிக்க வழியும்
  செய்வாள்
  நேசித்தல் தமிழ் அன்னை தந்த வழி
  நேசிப்பீர் நேசிப்பீர் உயிர்களெல்லாம்

  அன்புடன்
  நெல்லைக்கண்ணன்

 2. வாசித்து யோசித்து நேசிக்கின்ற
  வகை கண்ட என் இனிய இளைய நண்ப
  யாசித்து நிற்கின்ற அனைவருக்கும்
  எல்லாமே தந்து நின்ற தமிழாம் தாயும்
  வாசிக்கும் உம்மை என்றும் வாழ்த்தி
  நிற்பாள்
  வகை வகையாய் யோசிக்க வழியும்
  செய்வாள்
  நேசித்தல் தமிழ் அன்னை தந்த வழி
  நேசிப்பர் தமிழரெல்லாம் உம்மை
  வாழ்த்தி
  தங்கள் நெல்லைக்கண்ணன்

 3. அன்பின் அய்யா,

  தங்கள் வருகைக்கும்
  வாழ்த்துக்கும்
  மனமார்ந்த நன்றி.

Leave a comment

Your email address will not be published.


*