நட்புக்காலம் 6

31) இரண்டு இரவுகள்
ஒரு பகல்
ஈரக் காற்றுகளால்
நெய்த அந்த
அந்திப் பொழுது
யாவும் பாழாக
அந்தத் தொடர்வண்டிப்
பயணத்தில் எனக்கு
எதிரிலேயே
அமர்ந்து
தூங்கி
சாப்பிட்டு
படித்து
பேசாமலேயே இறங்கிப் போக
பெண்ணே உனக்குக்
கற்றுக் கொடுத்தது யார்.

************

32) புரிந்து
கொள்ளப்படாத
நாட்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தானாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை.

************

33) ஆய்வை முடிக்கிறவரை
காதலனை வரவேண்டாம் என்று
கட்டளையிட்டாய்.

வந்துகொண்டே
இருக்க வேண்டும்
என்று என்னிடம் கெஞ்சினாய்.

உன்னைக் காதலிப்பவனும்தான்
எவ்வளவு உயர்ந்தவன்.

உணர்ந்துகொண்ட
மெளனத்திற்கென்றே
ஒரு புன்னகை
இருக்கத்தான் செய்கிறது
என்பதை
அவன் தானே
எனக்குச்
சொல்விக் கொடுத்தான்.

************

34) பள்ளி மைதானம்
காலை வணக்கம்
காற்று கலைத்ததை
கண்களால்
மூடினேன்.

************

35) உனக்கு மடல் எழுத
உட்காருகிறபோது மட்டும்தான்
அப்புறம் எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக்
கிடைத்து விடுகின்றன.

************

36)காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல்
அவ்வளவு
எளிதன்று.

************

37) உனது சிறிய
பிரிவிற்கான
வலியைச்
சமாதனப்படுத்திக்
கொள்வதறகாகப்
பெரிய பிரிவுகளுக்கான
விடைபெறுதல்கள்
நிறைந்த
அந்த வானூர்தி
நிலையத்திற்குள் போய்
அமர்ந்து விட்டு
வந்தேன்.

************

38) பால் வாசனையில்
அம்மா.

அக்குள்
வாசனையில்
மனைவி.

இதயத்தின்
வாசனையில்
நட்பு.

************

39) அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
உள்ளங்களின்
நட்பில்
இருக்கிறது.

************

40) அனைத்துக் கல்லூரிப்
போட்டிகளுக்கான
பங்கேற்பிற்காகத்
தற்செயலாக
அமைந்த
அந்தத்
தொடர்வண்டிப் பயணத்தில்
என் தோள் வாங்கித்
தூங்கிய
உன் மூடிய விழிகளில்
விழித்தேன்
முதன்முதலாய்
நான்.

************

Leave a comment

Your email address will not be published.


*