நட்புக்காலம் 7

41) அந்த
இனிப்பை
நான் உண்கையில்

தவறி விழுந்த
ஒரு துண்டை எடுத்து
வாயில் போட்டுக் கொண்டான்
காதலன்.

ஒரு துண்டை எடுத்து
குப்பைக்கூடையில்
போட்டான்
நண்பன்.

************

42) தொடாமல் பேசுவது
காதலுக்கு
நல்லது
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.

தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த
மொழி
பேசிவிடும்.

************

43) இசைக்கருவிகளை
மீட்டி
கண்டெடுக்கிற
மெளனம்
காமம்

பேச்சுக்களைக்
கூட்டி
கண்டெடுக்கிற
இசை
நட்பு.

************

44) கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக் கண்டதும்
எப்படி
இவ்வளவு இயல்பாய்
தூங்கிவிடுகின்றன.

************

45) காதலனோடு
பேசிக்கொண்டிருக்கையில்
தாவணியை
சரிசெய்தேன்.

நண்பனோடு
பேசிக்கொண்டிருக்கையில்
தாவணியை
சரிசெய்தான்.

************

46) நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காங்கள்
உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்.

************

47) நள்ளிரவில்
கதவுதட்டும்
ஒலி கேட்டு
வந்து திறந்தேன்

காதலனோடு
சோர்ந்த முகத்தாடு
நின்றாய்

பறப்படுகிறேன்
அடுத்த கிழமை
பார்க்கலாம்
என்று புறப்பட்ட
காதலனுக்குக்
கையசைத்தாய்
என் தோளில்
சாய்ந்தபடி.

************

48) தேர்வு முடிந்த கடைசி நாளில்
நினைவேட்டில் கையொப்பம்
வாங்குகிற எவருக்கும்
தெரிவதில்லை

அது ஒரு
நட்பு முறிவிற்கான
சம்மத
உடன்படிக்கை
என்று.

************

Leave a comment

Your email address will not be published.


*