உலகம் 2009 – பகுதி 1

2009 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் உலகம். பரபரப்பும், பரிதவிப்பும் நிறைந்த மற்றோர் ஆண்டாக விடை பெற்றுச் செல்கிறது 2009. நினைவுப் பெட்டகத்தில் உறைந்து கிடக்கும் தகவல்களை மீண்டும் ஒருமுறை மீட்டிப் பார்ப்போமா?

உலக அரசியல் சரித்திரத்தில் புதிய அத்தியாயம் இந்த ஆண்டில் ஆரம்பம். ஆம். சுமார் ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்கக் கருவறையில் இருந்த கனவு, வடிவம் பெற்றது இந்த ஆண்டில் தான்.

அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றார் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் பிரதிநிதியாகப் பார்க்கப்படும் பராக் ஒபாமா. அவர் அமெரிக்காவின் 44 ஆவது அதிபர். வெள்ளை மாளிகக்குள் அடியெடுத்து வைத்த முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமை அவரைச் சேர்ந்தது.

அதேவேளை, ஆப்கானிஸ்தான், ஈராக் போர் காரணமாக உலக அளவில் சரிந்து கிடந்தது அமெரிக்காவின் கௌரவம். அதைக் காப்பாற்றும் பொறுப்பு அதிபர் ஒபாமாவின் கைகளில். பொருளியல் நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்த அமெரிக்காவை அவர் தூக்கி நிறுத்துவார் என்பது வாக்களித்த மக்களின் நம்பிக்கை. அதற்கு வலுச் சேர்த்தார் அதிபர் ஒபாமா.

பதவியேற்ற சிறிது நாட்களில் 789 பில்லியன் டாலர் பொருளியல் ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான விவாதத்துக்குப் பிறகு நிறைவேறியது அந்த மசோதா. அதன் மீதான வாக்கெடுப்பில் 61 க்கு 37 என்ற விகிதத்தில் உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைப் பதிவு செய்தனர். முக்கிய எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் 3 உறுப்பினர்களும் ஊக்குவிப்புத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தனர். அது, அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கை தந்த திருப்பம்.

கலைத் துறையைப் பொறுத்த அளவில் ஆசியாவுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பான அங்கீகாரம். பெப்ரவரியில் “Slumdog Millionaire” திரைப்படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். இந்திய இசைக்கலைஞர் ஒருவர் அந்த விருதைப் பெற்றது அதுவே முதல் முறை. Slumdog படத்தில் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்ற மற்றோர் இந்தியர்.

Slumdog Millionaire தவிர்த்து, ஆசியாவில் தயாரிக்கப்பட்ட வேறு சில படைப்புகளும் இவ்வாண்டில் ஆஸ்கர் கௌரவம் பெற்றன. ஆகச் சிறந்த பிறமொழி படத்துக்கான விருதைப் பெற்றது Departures என்னும் ஜப்பானியத் திரைப்படம். La Maison En Petits Cubes என்ற இன்னொரு ஜப்பானியப் படைப்பு ஆகச் சிறந்த வரைகலை குறும்படத்துக்கான விருதை வென்றது. இந்தியாவில் படமாக்கப்பட்ட Smile Pinky என்னும் விளக்கப்படமும் ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இணைந்து கொண்டது.

அரசியல், கலை இவற்றை அடுத்து வருகிறது விளையாட்டு. ஆனால், இது வினையான விளையாட்டு. மார்ச் 3 ஆம் தேதி பாகிஸ்தானில் வெடித்த குண்டு அந்த வினையின் வேதனைக்குரிய எதிரொலி.

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடச் சென்ற இலங்கை அணியினரைக் குறிவைத்து நடத்தப்பட்டது தாக்குதல். வீரர்கள் யாருக்கும் இழப்பில்லை. ஆனால் சல்லடையாகிப் போனது அவர்கள் சென்ற பஸ். எனினும், தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பறிபோயின எட்டு உயிர்கள். அவர்கள் அத்தனை பேரும் பாகிஸ்தானியப் போலீசார்.

தாலிபான்களை நோக்கி நீண்டன குற்றக் கரங்கள். அதன் தொடர்பில் கைது செய்யப்பட்டார் தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர். மேலும் அறுவரைத் தேடி வருவதாக அறிவித்தது பாகிஸ்தானியக் காவல்துறை. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இலங்கையில் செயல்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்திருப்பார்களோ? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

இவ்வளவுக்குப் பிறகும் களமிறங்கி விளையாடுமா இலங்கை?. மூட்டை முடிச்சுகளோடு பாகிஸ்தானை விட்டு வெளியேறியது. கிரிக்கெட் தொடரையும் புறக்கணித்தது. ஒட்டு மொத்த பேரிழப்பு விளையாட்டு ரசிகர்களுக்கு.

அன்று தொடங்கிய வேட்டுச் சத்தம் பாகிஸ்தானில் இன்று வரை ஓய்ந்தபாடில்லை. அவ்வப்போதும் விட்டுவிட்டும் வெடித்துக் கொண்டே தான் இருக்கின்றன குண்டுகள். பலியாவது என்னவோ அப்பாவி உயிர்கள் தான். அமெரிக்காவின் நெருக்கமான தோழராகத் திகழ்கிறது பாகிஸ்தான். அது தாலிபான்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் அவ்வப்போது வெடிக்கச் செய்கிறார்கள். எப்போது பூ மழையோ…? யார் அறிவார்?

அடுத்து நம் கவனத்துக்குரிய அம்சம் – மலேசியாவில் நடந்த தலைமை மாற்றம். அது நடந்தது ஏப்ரலில். மலேசியாவின் ஆறாவது பிரதமராகப் பொறுப்பேற்றார் திரு.நஜீப் அப்துல் ரசாக். அதற்கு ஏதுவாக மலேசியா ஆளுங்கட்சியான அம்னோவின் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். முன்னைய பிரதமர் திரு.அப்துல்லாஹ் அஹ்மத் படாவி பதவி விலகியதைத் தொடர்ந்து திரு.நஜீப் மலேசியாவின் பிரதமரானார்.

தமது 23 ஆம் வயதிலேயே மலேசிய அரசியலில் அடியெடுத்து வைத்தவர் திரு.நஜீப். சென்ற ஆறு ஆண்டுகளாக மலேசியாவின் துணைப் பிரதமராகவும் சேவையாற்றியவர். சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய அரசியலில் தனி முத்திரை பதித்து வருகிறார் திரு.நஜீப். இவர் மலேசியாவின் இரண்டாவது பிரதமரான திரு.அப்துல் ரசாக்கின் மகன். பொருளியல் நெருக்கடியும், உள்நாட்டு அரசியல் குழப்பங்களும் அதிகரித்திருந்த வேளையில் திரு.நஜீப் பிரதமராகப் பதவியேற்றார்.

மலேசியாவை அடுத்து மியன்மாரிலும் ஓர் அரசியல் புயல். அது வீசியது மே மாதத் தொடக்கத்தில். மியன்மாரில் நடப்பது இராணுவ ஆட்சி. மக்களாட்சியைக் கொண்டு வர வேண்டுமென்று போராடுகிறார் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி. அதற்கு இசைய மறுத்த இராணுவம் அவரை இல்லக் காவலில் வைத்தது. அந்தத் தண்டனை முடியும் தருவாயில் மீண்டும் ஒரு சோதனை.

விதிகளை மீறி தமது வீட்டில் அமெரிக்கர் ஒருவரை இரகசியமாகத் தங்க வைத்தார் என்பது குற்றச்சாட்டு. ஏரியில் நீந்தியபடியே அந்த அமெரிக்கர் ஆங் சான் சூச்சி வீட்டுக்குள் நுழைந்தார் என்றது இராணுவம். விசாரணை முடிவில் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது ஆங் சான் சூச்சி. பின்னர் அது பாதியாகக் குறைக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு மியன்மாரில் நடக்கவுள்ள தேர்தலில் ஆங் சான் சூச்சியின் பங்களிப்பைத் தடுக்கும் நோக்கில் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சூச்சியின் வீட்டில் நுழைந்த அமெரிக்கருக்கு ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எவ்வித நிபந்தனையுமின்றி சூச்சியை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

Leave a comment

Your email address will not be published.


*