உலகம் 2010 – 1

2010 விடை பெறும் தருணம்.
எண்ணற்ற சம்பவங்கள் இவ்வாண்டில்.
எல்லாவற்றையும் விவரித்துச் சொல்வது சாத்தியமல்ல.
முக்கியமான சில சம்பவங்களைத் தொகுத்தளிப்பது நோக்கம்.

மியன்மாரில் மிகப் பெரிய அரசியல் மாற்றம். மியன்மார் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியான ஆங் சான் சூச்சிக்கு வீட்டுக் காவலில் இருந்து விடுதலை. 1990 ல் நடந்த தேர்தலில் அவர் சார்ந்த கட்சிக்கு மகத்தான வெற்றி. இருப்பினும் ஆட்சி அமைக்க முடியவில்லை. முட்டுக் கட்டை போட்டது இராணுவ அரசாங்கம். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் சூச்சி. அனைத்துலகச் சமூகத்தின் தொடர்ந்த வலியுறுத்தல், அவருக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது.

கடந்த ஆண்டே அவர் வீட்டுக் காவலில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். அமெரிக்கர் ஒருவர் அனுமதியின்றி சூச்சியைச் சந்திக்க முயன்றார். அதைக் காரணமாக வைத்து இராணுவ அரசாங்கம் சூ ச்சியின் வீட்டுக் காவலை நீட்டித்தது. தண்டனைக் காலம் முடிந்ததும், நவம்பர் பதின்மூன்றாம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.சூச்சியின் ஆதரவாளர்களுக்கு அதில் பெரும் மகிழ்ச்சி.

20 வருடங்களுக்குப் பிறகு இவ்வாண்டு மியன்மாரில் தேர்தல் நடந்தது. ஆங் சான் சூ ச்சியின் ஜனநாயக தேசிய லீக் அதில் போட்டியிடவில்லை. நியாயமான வழியில் தேர்தல் நடைபெறாது என்பது அவர்களுடைய எண்ணம். அதனால் அவர்கள் தேர்தல் களத்தைப் புறக்கணித்தனர்.

விடுதலைக்குப் பிறகு தமது கட்சித் தலைமை அலுவலகம் முன் உரையாற்றினார் சூச்சி. மியான்மாரின் ராணுவ அரசை பேச்சு வார்த்தைக்கு அழைத்த அவர், தன்னால் மட்டும் ஜனநாயகத்தை பெற்றுவிட முடியாது. மக்களின் பங்களிப்பும் முக்கியம் என்றார்.

சூ ச்சிக்கு கிடைத்த விடுதலை. மியன்மாரில் மக்களாட்சி மலர்வதற்கான வழிகளில் ஒன்று.

*****

ஆஸ்திரேலியாவில் இவ்வாண்டு ஆட்சி மாற்றம். 2007 ல் ஆட்சிக்கு வந்தார் தொழிற்கட்சியின் கெவின் ரட். அரசியல் குழப்பங்களால் அவருடைய செல்வாக்கில் பெரும் சரிவு. குழப்பத்தைத் தீர்க்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் கெவின் ரட். துணைப் பிரதமராக இருந்த ஜூலியா கிலார்டுக்கு அடித்தது யோகம். புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் அவர். ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல் பெண் பிரதமர் ஜுலியா என்று பொறித்துக் கொண்டது காலம்.

ஆகஸ்டில் ஆஸ்திரேலியாவில் தேர்தல். முடிவுகளில் கடும் இழுபறி. 70 ஆண்டுகளில் முதல்முறையாக எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள இடங்கள் 150. டோனி அபாட் தலைமையிலான லிபரல் கட்சிக் கூட்டணி வென்றது 73 இடங்கள். பிரதமர் ஜூலியா கில்லார்டின் தொழிற்கட்சிக்குக் கிடைத்தன 72 இடங்கள். பெரும்பான்மைக்குத் தேவை 76 இடங்கள். இறுதியில் ஜுலியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர் சுயேச்சை உறுப்பினர்கள். மீண்டும் பிரதமரானார் ஜுலியா.

*****

பிரிட்டனிலும் இவ்வாண்டு தேர்தல் அலை. மே 6 ல் தேர்தல். பதிமூன்று ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த தொழிற்கட்சிக்குத் தேர்தலில் பலத்த அடி. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த இடங்கள் 650. கன்சர்வேடிவ் கட்சி வென்றது 306 இடங்கள். தொழிற்கட்சிக்குக் கிடைத்தது 258 இடங்கள். சுதந்திர ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது 57 இடங்கள். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.

ஆட்சி அமைப்பது குறித்து கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், லிபரல் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே ஏற்பட்டது உடன்பாடு. 1945-ம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டன் வரலாற்றில் கூட்டணி ஆட்சி. புதிய பிரதரானார் டேவிட் கேமரூன். 200 ஆண்டு பிரிட்டன் அரசியல் வரலாற்றில் மிக இளம் பிரதமர் டேவிட் கேமரூன். அவருக்கு வயது 43.

*****

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இவ்வாண்டு சோதனைக் காலம்.

செனட் சபைக்கான தேர்தல் நடந்தது இவ்வாண்டு. மக்கள் செல்வாக்குப் பெற்றவர் என்று புகழப்பட்ட ஒபாமாவுக்குப் பின்னடைவு. அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சிக்குத் தேர்தலில் பலத்த அடி. செனட் சபையில் பெரும்பான்மையை இழந்தது ஜனநாயகக் கட்சி. இனி, முக்கிய அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு, குடியரசுக் கட்சியின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை. இருப்பினும் செனட் சபையை மீறித் தன்னிச்சையாகத் தீர்மானம் நிறைவேற்றும் அதிகாரம் அதிபருக்கு உண்டு. சென்ற ஆண்டுத் தேர்தலின் போது ஒபாமாவுக்கு இருந்த செல்வாக்கு இவ்வாண்டில் வீழ்ந்து விட்டதாகச் சொல்கின்றன கருத்துக் கணிப்புகள். இழந்த பெருமையை மீட்டெடுப்பது அதிபர் ஒபாமாவுக்குப் புத்தாண்டுச் சவால்.

*****

இவ்வாண்டுத் தொடக்கத்தில் ஆசிய வட்டாரத்தில் அதிகக் கவனத்தை ஈர்த்தது இலங்கை. காரணம் அங்கே நடந்த அதிபர் தேர்தல். 72 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின. அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கும், முன்னாள் இராணுவத் தலைவர் ஜெனரல் சரத் ஃபொன்சேகாவுக்கும் இடையே கடும் போட்டி. முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி ஃபொன்சேகாவை ஆதரித்தது. இருப்பினும் பலன் இல்லை. மீண்டும் வென்றார் ராஜபக்ஷ. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியின் பலனை அறுவடை செய்து விட வேண்டும் என்பது அவருடைய கணக்கு. 57.8 விழுக்காட்டு வாக்குகள் பெற்ற ராஜபக்ஷ மீண்டும் அதிபரானார்.

அவரை எதிர்த்துக் களம் கண்ட ஜெனரல் ஃபொன்சேகா தேர்தல் முடிந்த சூட்டோடு கைது செய்யப்பட்டார். இலங்கையின் தேசியப் பாதுகாப்புச் சட்டங்களை மீறினார் என்பது அரசாங்கத்தின் குற்றச்சாட்டு. ஆனால் அவ்வாறு எந்தத் தவறும் செய்யவில்லை என்றார் ஜெனரல் ஃபொன்சேகா. விசாரணை தொடர்ந்தது. இறுதியில் ஃபொன்சேகாவுக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அவர் இருப்பது வெலிக்கடை சிறையில்.

போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்னும் முறையாக வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.

*****
தாய்லந்தின் நடந்த போராட்டம் அங்கு அரசியலில் சூட்டைக் கிளப்பியது. அரசுக்கெதிரான செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பேங்காக் நகரின் நட்சத்திர ஹோட்டல்களும் முக்கியமான பலபொருள் அங்காடிகளும் மூடிக் கிடந்தன. மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ராணுவம் மற்றும் காவல்துறையினருக்கும் செஞ்சட்டைக்காரர்களுக்கும் இடையே நடந்த போராட்டம் தாய்லந்தில் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்றது இராணுவ அரசு. ஆனால் உடனடித் தேர்தல் ஆர்ப்பாட்டக்காரர்ககளின் கோரிக்கை. அதை எப்படி நடத்துவது? கையைப்பிசைந்தன ராணுவமும், அரசும்.

ஒருவழியாக, ஆர்பாட்டக்காரர்களின் தலைவர்கள் ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களின் பிடியிலிருந்த முக்கிய வர்த்தகப் பகுதிகளை மீட்டது ராணுவம். இருப்பினும் ஆர்பாட்டக்காரர்கள் வெளியேறியவுடன் பேங்காக்கில் உள்ள முக்கியக் கட்டடங்கள் தீப்பற்றி எரிந்ததாக தாய்லாந்துத் தகவல்கள் தெரிவித்தன. பிளவுபட்டுள்ள நாட்டை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமது அரசாங்கம் பாடுபடும் என்றார் தாய்லந்துப் பிரதமர் அபிசிட் விஜெஜீவா. நிலைமை இப்போது பரவாயில்லை. இருப்பினும் எப்போது? என்ன நடக்கும்? என்பதை அனுமானிக்க முடியாத சூழல்.

****

வடகொரிய அதிபர் கிஜ் ஜோங் இல், தமது இளைய மகன் ஜோங் அன்னை தமது அரசியல் வாரிசாக அறிவித்தார். அது அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியது. ஆனால் வடகொரியாவைப் பொறுத்தவரை அது சாதாரண நிகழ்வு. வாரிசு அரசியல் பற்றிய விமர்சனங்களை வடகொரியா கண்டு கொள்ளவில்லை.

இந்தச் சூழலில் வட – தென் கொரிய எல்லைப் பகுதியில் போர் மேகம். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள கடல் எல்லை இன்னும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை. அதன் தொடர்பில் அவ்வப்போது சர்ச்சைகள். இப்போது அங்கே முறுகல் நிலை.

உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தி இராணுவப் பயிற்சியை மேற்கொண்டது தென்கொரியா. அவ்வாறு நடந்தால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தது வடகொரியா.

கொரியத் தீபகற்பத்தில், அதிகரித்துவரும் பதற்றம் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் நடத்தியது ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம். கருத்திணக்கம் ஏற்படவில்லை. இரு கொரியாக்களும், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று சீனாவும் ரஷ்யாவும் வற்புறுத்தின.

இரு கொரியாக்களும் தங்களுடைய பிரதேசத்தைத் தற்காக்க ராணுவ வழிகளை நாடினால் அங்கு போர் மூளும் அபாயம் வரலாம் என்ற கவலை நீடிக்கிறது.

*****
இந்திய அரசியல் களத்தில் கடுமையான அனல். நாளொரு முறைகேடு. பொழுதொரு பதவி விலகல். இப்படியாகத் திடீர் திருப்பங்கள். எங்கே? எப்போது? என்ன முறைகேடுகள் வெளிவரும் என்று முன்னுரைக்க முடியாத நிலை. பரபரப்பான செய்திகளைப் பார்த்துத் திகைத்து நிற்கிறார்கள் மக்கள்.

அக்டோபரில் காமன்வெல்த் போட்டிகளை நடத்தியது இந்தியா. அதன் தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகச் செய்திகள் வெளியாகின. விசாரணைகள் நடந்து வருகின்றன. அதன் எதிரொலியாகப் பல தலைகள் உருண்டன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆதர்ஷ் வீடுகள் ஒதுக்கீடு தொடர்பில் முறைகேடுகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் அசோக் சவாண் பதவி விலகினார். புதிய முதல்வராக பிருத்வி ராஜ் சவாண் பதவியேற்றார். விசாரணை தொடர்கிறது.

அதையடுத்துக் கிளம்பியது 2G ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல். அதனால் இந்திய அரசாங்கத்துக்கு சுமார் ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை. இந்தியத் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவே அதற்கு பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டியது அந்த அறிக்கை. 2G அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை. விதிகளுக்குட்பட்டுத் தான் அனைத்தும் நடந்தன என்பது ஆ.ராசாவின் வாதம்.

ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்குக் கடும் நெருக்கடி. அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ராசா . அப்போதும் எதிர்க்கட்சிகள் சமாதானம் அடையவில்லை. 2G அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தின எதிர்க்கட்சிகள். நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கின. தொலைத்தொடர்பு ஊழல் தொடர்பாகப் பதிலளிக்க ஏன் பல மாதங்கள் ஆனது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக நம்பப்படுவோர் வீடுகள், அலுவலகங்கள் சோதனையிடப்பட்டன. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான விசாரணையைக் கண்காணிக்கப் போவதாக அறிவித்தது இந்திய உச்சநீதிமன்றம். விசாரணை பற்றிய முழு அறிக்கையை அடுத்தாண்டு பிப்ரவரி பத்தாம் தேதிக்குக்குள் இந்திய மத்திய புலனாய்வுத் துறை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி அரசியல் களம் தகித்த வேளையில் கர்நாடகாவிலும் அரசியல் புயல். பாதிக்கப்பட்டது அங்கே ஆளும் பாரதிய ஜனதா கட்சி. அரசாங்க நிலத்தை தம் புதல்வர்களின் பெயர்களுக்கு மாற்றியதாக முதல்வர் எடியூரப்பா மீது குற்றச்சாட்டு. அதன் தொடர்பில் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன கர்நாடக எதிர்க்கட்சிகள். அதை நிராகரித்தது பா.ஜ.க.

இந்திய அரசியல் களத்தின் ஊழல்கள் பற்றிய விசாரணைகள் தொடர்கின்றன.

தொடரும்….

Leave a comment

Your email address will not be published.


*