உலகம் 2010 – 3

உலகின் கவனத்தை எப்போதும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் நாடு ஈரான். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. அணு சோதனை நடத்துவது எங்கள் உரிமை. அதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்றது ஈரான். அணு ஆயுதச்சோதனை பற்றிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து உலக அமைப்பின் பாதுகாப்பு மன்றம் ஈரான் மீது தடை விதித்தது. ஜுன் 9 ஆம் தேதி அந்தத் தடை நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் ஈரான் அசைந்து கொடுக்கவில்லை.

அக்டோபரில் ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் மையத்தை அனைத்துலக அணுசக்தி நிறுவனம் சோதனையிட்டது. இதற்கிடையே ஈரானின் அணுத் திட்டம் முரண்டு பற்றி வல்லரசு நாடுகள் ஜெனீவாவில் ஆலோசனை நடத்தின. எந்த முடிவும் எட்டப்படவில்லை. மீண்டும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துருக்கியில் ஆலோசனை நடக்கும்.

******

மத்திய கிழக்கில் அமைதி வேண்டும் என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பு. ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் அந்த எதிர்பார்ப்பு இன்னும் கூடியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேசினார் ஒபாமா. அதைத் தொடர்ந்து பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசுடனும் தொலைபேசினார். செப்டம்பரில் இஸ்ரேல் அரசும், பாலஸ்தீன தலைவர்களும் நேரடிப் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.

ஜெருஸலேமில் உள்ள ஒரு பகுதியை பாலஸ்தீனர்களுக்கு விட்டுத் தரச் சம்மதித்தது இஸ்ரேல். ஜெருஸலேமில் யூதர்கள் வாழும் பகுதியை இஸ்ரேல் எடுத்துக் கொண்டு, அகதிகள் அதிகம் வசிக்கும் பகுதியை பாலஸ்தீனர்களுக்கு விட்டுத் தரத் தயாராக இருப்பதாகச் சொன்னார் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எஹுத் பராக். அவருடைய இந்தக் கருத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு உடன்பாடில்லை என்று தகவல் வெளியானது. ஜெருஸலேம் இஸ்ரேலியர்களின் பிரிக்கப்படாத தலைநகர். அதை விட்டுக் கொடுக்க முடியாது என்பது நெதன்யாகு ஆதரவாளர்களின் வாதம். எப்போது விடிவு வரும்? என்ற கேள்வியுடன் கடந்து கொண்டிருக்கிறது காலம்.

******

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆசியப் பயணம் இவ்வாண்டு முக்கியத்துவம் பெற்றது. பத்து நாள் நீண்டது அந்தப் பயணம். தொடக்கத்தில் அவர் காலடி வைத்தது இந்தியாவில். செனட் சபைத் தேர்தலில் ஓபாமா கட்சி பின்னடைவைச் சந்தித்தது. அதன் பிறகு, அவருடைய ஆசியப் பயணம் கூர்ந்து கவனிக்கப்பட்டது.

ஒபாமா மும்பை வந்த வேளை இந்தியாவில் தீபாவளிக் கொண்டாட்டம். அதில் அவர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய போது சாமர்த்தியமாகப் பதிலளித்தார்.

இந்திய நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா உரையாற்றியது தனிச்சிறப்பு. இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகம், வளரும் நம்பகத்தன்மை பற்றிப் பெருமிதம் கொண்டார். அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகப் பரிமாற்றங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார் ஒபாமா.

அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவின் உட்கட்டமைப்பில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார் இந்தியப் பிரதமர் திரு மன்மோகன் சிங். வர்த்தக ரீதியாக ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பில் பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இந்திய பயணத்தை முடித்து இந்தோனேசியாவுக்குச சென்றார் அதிபர் ஒபாமா. அங்கும் அவர் பல பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டார். பின்னர் கொரியா சென்று அங்கு நடந்த G20 மாநாட்டில் கலந்து கொண்டார்.

******
விளையாட்டு ரசிகர்களைக் கட்டிப் போட்டது முதன்முறையாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடந்த 19 ஆவது உலகக் கிண்ணக் காற்பந்து. தென்னாப்பிரிக்கா அந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதை ஆச்சர்யக் குறியாக்கிச் சாதித்தது தென்னாப்பிரிக்கா.

காற்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒருசேர அள்ளித் தந்தது உலகக் கிண்ணப் போட்டி. அந்த அணி வெல்லும். இல்லையில்லை இந்த அணிதான் வெல்லும் என்ற கணிப்புகள் கொடி கட்டிப் பறந்தன. ஆருடம் சொன்ன ஐந்தறிவுப் பிராணிகளுக்கு அடித்தது யோகம். Octopus (ஆக்டோபஸ்) ‘Paul’ க்கும், சிங்கப்பூர் கிளி மணிக்கும் ராஜ மரியாதை. ஆக்டோபசின் கணிப்பு நிலைத்தது. மணியின் முன்னுரைப்பு பொய்த்துப் போனது.

பலரும் எதிர்பார்த்த பலம் பொருந்திய அணிகளான பிரேசில், அர்ஜெண்டினா, பிரான்ஸ், வெற்றியாளரான இத்தாலி, ஜெர்மனி ஆகிய குழுக்கள் மண்ணைக் கவ்வின.

இறுதிப் போட்டியில் நெதர்லாந்தும், ஸ்பெயினும் பொருதின. வழக்கமான ஆட்ட நேரம் முடியும்வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் தரப்பட்டது. அதன் முதல் பாதியிலும் கோல் இல்லை. இரண்டாவது பாதி ஆட்டம் முடிவதற்கு 4 நிமிடங்கள் இருந்தபோது, ஸ்பெயினின் இனியெஸ்டா அற்புதமாகக் கோல் அடித்தார். வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது ஸ்பெயின். ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார் ஸ்பெயினின் இனியெஸ்டா.

******
பத்தொன்பதாவது காமன்வெல்த் போட்டி இந்திய வராலாற்றில் ஒரு மைல் கல். போட்டி தொடங்குவதற்கு முன்பு பல சர்ச்சைகள். விளையாட்டு அரங்குகள், வீரர்களின் குடியிருப்புக்களைத் தயார் செய்வதில் தாமதம், சுகாதாரக் குறைபாடு, விளையாட்டுக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் இப்படிப் பல விவாதங்கள்.

காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாடலுக்கு இசை திரு. ஏ.ஆர்.ரஹ்மான். அந்தப் பாடலும் சர்ச்சையில் சிக்கியது. இசையில் விறுவிறுப்பு இல்லாததால் மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்று குற்றஞ்சாட்டின அரசியல் கட்சிகள். போட்டி தொடங்குவதற்கு முன் சில மாற்றங்களைச் செய்து கொடுத்தார் ஏ.ஆர். ரஹ்மான்.

பிரிட்டீஷ் அரசியாரின் சார்பில் இளவரசர் சார்ல்ஸ், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இருவரும் சேர்ந்து போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலைஞர்கள் தொடக்க விழாவில் தங்கள் திறனை வெளிப்படுத்தினர். நீண்ட நெடிய இந்தியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்தது தொடக்க நிகழ்ச்சி.

போட்டிகள் நடந்த வேளையிலும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. முனைந்து செயல்பட்ட இந்திய அதிகாரிகள் தவறுகளைக் களைந்தனர்.

தெற்காசிய வட்டாரத்தின் மிகப் பெரிய நாடான இந்தியா உலகத் தரம் வாய்ந்த பெரிய போட்டிகளை நடத்தியதில் சந்தித்த சவால்கள் ஏராளம். அத்தனையும் கடந்து காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்தித் தன் பெருமையை உலகுக்கு நிரூபித்தது.

******

இந்தியக் கிரிக்கெட் நாயகன் சச்சின் டென்டுல்கருக்கு இது சாதனைக் காலம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து நாள் போட்டி நடந்தது பெங்களூரில். அதில் விளையாடிய சச்சின் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். ஐந்து நாள் போட்டிகளில் பதினாலாயிரம் ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனை அது. 171 ஐந்து நாள் போட்டிகளில் விளையாடி அதைச் சாத்தியமாக்கினார் சச்சின். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்.

கிரிக்கெட் வரலாற்றில் இன்னொரு முத்திரையைப் பதித்தார் சச்சின். ஐந்து நாள் போட்டிகளில் 50 முறை 100 ஓட்டங்களைத் தாண்டிய முதல் வீரர் என்பது அந்த முத்திரை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி போது சச்சின் அந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

******
கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு சாதனை நாயகன் இலங்கையின் முத்தையா முரளீதரன்.

பந்து வீச்சில் அவருடைய சாதனையை முறியடிக்க இனியொருவர் வரவேண்டும். ஐந்து நாள் போட்டி, ஒரு நாள் போட்டி இவ்விரண்டிலும் உலக அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை அவருக்குச் சொந்தம். காலேவில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சாதித்தார் அவர். 133 ஐந்து நாள் போட்டிகளில் முரளீதரன் வீழ்த்தியவர்களின் எண்ணிக்கை 800. அந்தச் சாதனையோடு ஐந்து நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் முரளீதரன்.

******

கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கவனயீர்ப்பைப் பெற்ற அம்சம். ஐந்து நாள் நடந்த அந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது தமிழக அரசு. இந்திய அதிபர் பிரதீபா பாட்டீல் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். உலக நாடுகளில் இருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழின் பாரம்பர்யத்தை விளக்கும் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆய்வரங்கம், கருத்தரங்கம், உலகத் தமிழ் இணைய மாநாடு ஆகியன முக்கிய அம்சங்கள்.

சிங்கப்பூரின் மூத்த துணையமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இணைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார். நவீனத் தொழில்நுட்ப யுகத்தில் தமிழை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வழிமுறைகள் பற்றி ஆராயப்பட்டன.

செம்மொழி மாநாட்டுக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த மைய நோக்குப் பாடல் மக்களை வெகுவாக ஈர்த்தது.
******
அரசியல் மாற்றம், இரகசியத் தகவல்கள் கசிந்ததால் விளைந்த சர்ச்சைகள், மக்களின் கவனத்தை ஈர்த்த விளையாட்டுப் போட்டிகள் இப்படி வண்ணமயமாக நம்மை விட்டுக் கடந்து செல்கிறது 2010. பிறக்கவிருக்கும் புத்தாண்டு நம் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டு வர வேண்டும். அனைவருக்கும் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
******

Leave a comment

Your email address will not be published.


*