உலக உலா – 2011 – 2

 

பல்லாண்டுகளாகப் பசை போட்டது போல ஆட்சிக் கட்டிலில் ஒட்டியிருந்த அரபு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு மக்கள் போதித்த பாடம் இவ்வாண்டின் முக்கிய அரசியல் திருப்பங்களில் முதன்மையானது.

துனிசியாவில் ஆரம்பித்த ஜனநாயகப் புரட்சி எகிப்து, ஏமன், லிபியா, சிரியா என அனைத்து அரபு நாடுகளுக்கும் பரவியது. மக்களின் எழுச்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.

இவ்வாண்டுத் தொடக்கத்தில் துனிசியாவின் அதிபர் பென் அலி மக்கள் புரட்சிக்கு முகம் கொடுக்க முடியாமல் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறினார். அவர் தஞ்சமடைந்த நாடு சவுதி அரேபியா. 23 ஆண்டுகள் பென் அலி ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.

அரசாங்கப் பணத்தைக் கையாடியது, சட்ட விரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்தது, ஆட்சி பொறுப்பை தவறாக பயன்படுத்தியது என்று அவர் மீது பல குற்றச்சாட்டுகள். இவற்றுக்காக 66 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு தான் இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டது என்பது நகைமுரண்.

பென் அலியைக் கைது செய்ய அனைத்துலகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது. துனிசியாவின் புதிய அரசாங்கம் பென் அலியை ஒப்படைக்கக் கோரினால், அதற்கு பதிலளிப்பதாகச் சொல்கிறது சவூதி அரேபியா.

துனிசியாவைத் தொடர்ந்து எகிப்திலும் மக்கள் வீறு கொண்டு எழுந்தனர். 20 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த அதிபர் Hosni Mubarak பதவி விலக வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. கெய்ரோ Tahrir சதுக்கத்தில் திரண்ட மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 18 நாட்களுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பைத் துறந்தார் Hosni Mubarak. ராணுவத்திடம் தமது அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டு தலைநகரை விட்டு வெளியேறினார்.

கொலைக் குற்றம் செய்ததாகவும், ஊழல் புரிந்தததாகவும் அவர் மீது தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள். தாம் தவறேதும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் சொன்னார் Mubarak. தற்போது அவருக்கு உடல் நிலை சரியில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இவ்வேளையில் அங்கு முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்த இரண்டு கட்ட தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவரும். அதைப் பொறுத்தே எகிப்தின் எதிர்காலம் அமையும். இதனிடையே தற்காலிகமாகச் செயல்படும் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

துனிசியா எகிப்து போன்று ஏமனிலும் பத்து மாத காலமாக அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நாளடைவில் கலவரங்கள் மோசமானதால் ஏமன் அதிபர் Saleh தமது பதவிகளைத் துணை அதிபர் Abdrabuh Mansur இடம் வழங்குவதாக அறிவித்தார்.

அதேபோல சிரியாவிலும் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட்டங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளன.

அரபு நாடுகளில் அரசியல் மாற்றங்கள் ஒருபுறம் நிகழ்ந்து வரும் வேளையில் லிபியப் போர் அவ்வட்டாரத்தில் அனலாகக் கொதித்தது. கர்னல் கடாஃபியைப் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்பது லிபிய அதிருப்தியாளர்களின் பிரதான நோக்கம்.

லிபியாவில் தலைவர் கடாஃபிக்கு எதிராக அதிருப்தியாளர்கள் போர் தொடுத்தனர். அவர்களுக்கு நேட்டோ படை ஆயுதங்களைக் கொடுத்து உதவியது. அதிருப்தியாளர்கள் படிப்படியாக முன்னேறினர்.

தலைநகர் திரிப்போலி அதிருப்தியாளர்கள் வசம் விழுந்த பின் தலைவர் கடாஃபி தலைமறைவானார். நீண்ட நாள் தேடலுக்குப் பின் கடாஃபியை அவரது சொந்த ஊரான SIRTE வில் அதிருப்தியாளர்கள் கண்டுபிடித்துக் கோரமாகக் கொன்றனர். கடாஃபியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மகன் Saifal Islamம் அதிருப்தியாளர்களிடம் அகப்பட்டார்.

அரபுநாடுகளின் மக்கள் புரட்சி இவ்வருடத்தின் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் செல்கிறது. அதே போல் அமெரிக்காவுக்கும் இவ்வாண்டு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சத்தாம் ஹுஸைன் தூக்கிலிடப்பட்ட பிறகும், நீண்ட நாட்களாக அமெரிக்கப் படைகள் ஈராக்கில் முற்றுகையிட்டு வந்தன.

அமெரிக்காவில் அதிபர் ஓபாமா பதவி ஏற்ற பிறகு ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைப் படிப்படியாக வெளியேற்றப்படும் என்று அறிவித்திருந்தார். அதே போல ஈராக்கில் உள்ள கடைசித் தொகுதி அமெரிக்கப் படையினர் இவ்வாண்டு இறுதியில் வெளியேறினர்.

இந்த வருடம் பாலஸ்தீனத்திற்கு ஒரு முக்கிய வருடம். உலக நிறுவனத்தில் “பார்வையாளர்” தகுதி மட்டுமே பாலஸ்தீனிடம் உள்ளது. தன்னை முழு உறுப்பு நாடாக ஏற்றுக்கொள்ளுமாறு அதிபர் மஹ்மூத் அப்பாஸ், செப்டம்பர் மாதம் முறையாக விண்ணப்பித்தார். உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தின் பரிசீலனைக்கு அந்த விண்ணப்பம் சென்றுள்ளது.

உலகின் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனிநாடாக ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளன. இருப்பினும், அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்தக் கோரிக்கையைக் கடுமையாக எதிர்க்கின்றன. உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் பாலஸ்தீன தனிநாட்டுக்கான கோரிக்கை விவாதிக்கப்படும்போது தன்னுடைய ரத்து அதிகாரத்தைக் கொண்டு அதனைத் தோல்வியடையச் செய்யப்போவதாக எச்சரித்திருக்கிறது அமெரிக்கா.

இந்நிலையில் சென்ற அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்திற்கு உலக நிறுவனக் கலாசார அமைப்பான UNESCO-வில் முழு உறுப்பியம் கிடைத்தது. அமெரிக்க, இஸ்ரேலிய எதிர்ப்புக்கு இடையில் பாலஸ்தீனத்திற்குக் கிடைத்த அரசதந்திர வெற்றி அது. தற்போது யுனெஸ்கோ தலைமையகத்தில் பாலஸ்தீனக் கொடியும் பறக்கத் தொடங்கியுள்ளது.

அடுத்து இவ்வருடத்தின் மிகப்பெரிய திருப்பம் இந்தியாவின் அன்னா ஹசாரே ஏற்படுத்திய தாக்கம். காமென்வெல்த் விளையாட்டுகள் ஏற்பாட்டில் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை விற்பதில் ஊழல் என்று ஊழல்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே போனது.

ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார் காந்தியவாதியாகத் தம்மை அடையாளப்படுத்தும் அன்னா ஹசாரே. லோக்பால் மசோதா எனும் ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்து அரசாங்கத்துடன் கபடியாடி வருகிறார். லோக்பால் மசோதாவை இந்திய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பது இப்போதைய நெருக்கடி.

மறுபுறத்தில் அன்னாவைக் கடுமையாகச் சாடுகின்றன சில ஊடகங்கள். காங்கிரசை எதிர்ப்பது மட்டுமே அவரின் குறிக்கோள். அதற்காக ஊழல் ஒழிப்பு என்ற போர்வையை அவர் போர்த்தி வருகிறார். நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக அறியப்படும் பாரதிய ஜனதா அன்னாவின் போராட்டம் பற்றி மௌனம் சாதிக்கிறது. ஏனைய கட்சிகளும் கண்டும், காணாமல் இருக்கின்றன. அன்னாவுடைய போராட்டத்தின் பின்னணியில் ஆதிக்க சக்திகளின் சதி இருக்கிறது என்பது அவரை எதிர்ப்பவர்களின் வாதம். எது நிஜம்?

தமிழகத்தில் ஆட்சி மாற்றம். ஐந்து ஆண்டு காலத்துக்குப் பிறகு மீண்டும் மாபெரும் வெற்றியைச் சுவைத்திருக்கிறது தமிழகத்தின் பிரதானக் கட்சியான அதிமுக. நடிகர் விஜயகாந்தின் தேமுதிக, கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து களம் கண்ட அதிமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி. தமிழக சட்டமன்றத்துக்கு மொத்தமுள்ள இடங்கள் 234. அவற்றில் 201 இடங்களைக் கைப்பற்றியது அதிமுக அணி.

காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகளுடன் கைகோத்துக் களம் கண்ட திமுகவுக்குக் கடுமையான சறுக்கல். அந்த அணி பெற்ற இடங்கள் 31. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற ஜெயலலிதா நான்காவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஆட்சிக் கட்டிலுக்கு வந்த பிறகு ஏகப்பட்ட தடாலடிகள். அந்த நடவடிக்கைகள் அவருக்குப் பெருமையைத் தரவில்லை. சமச்சீர் கல்வியை அனுமதிப்பதில் பிடிவாதம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்கப் போவதாக அறிவித்து நீதிமன்றத்தில் குட்டு வாங்கியது. இப்படி அம்மாவின் இலக்கு பரபரப்பும், பழிவாங்கலும் நிறைந்ததாக நகர்கிறது.

இந்தக் குறைகளை மக்கள் எளிதில் மறக்க வேண்டுமல்லவா? சசிப் பெயர்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. உடன் பிறவாச் சகோதரி சசிகலாவும் அவருடைய உறவினர்கள் 14 பேரும் அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கப்பட்டனர். இது கனவா? கற்பனையா? கடைந்தெடுத்த தீர்மானமான முடிவா? தெளிவு தெரியாமல் சந்தேகப் பார்வையைச் சங்கேதமாகச் செலுத்துகின்றனர் மக்கள்.

உலா தொடரும்… 🙂

Leave a comment

Your email address will not be published.


*