வானொலிக் குயில் “ராஜேஸ்வரி சண்முகம்”

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38173-2012-03-23-14-48-36.html 

சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்படியொரு பேரதிர்வு

மூத்த ஒலிபரப்பாளர், கிரிக்கெட் வருணனையாளர்

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின்

மடல் வழியே மனம் தாக்குமென்று.

மின்மடல் ‘Subject’ கண்டதும், ராஜேஸ்வரி அம்மா பற்றிய

கலையுலகப் பகிர்வு என்று தான் நினைத்தேன்.

ஆனால், அதனினும் கடினமாக இருந்தன

உள்ளே பொதிந்திருந்த வார்த்தைகள்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவையில்

அந்தக் குயிலின் குரலைக் கேட்டுக் கேட்டு

அலாதி ஆனந்தம் கொண்ட தலைமுறையில் அடியேனும் ஒருவன்.

என்னை விட அந்தக் குயிலிசையில்

கட்டுண்டு கிடந்தவர்கள் என் அம்மாவும், அக்காவும்.

மாண்புக்குரிய B.H அவர்களும், ராஜேஸ்வரி அம்மாவும்

இணைந்து படைத்த நிகழ்ச்சிகளுக்குத்

தனி ரசிகர் வட்டம் எப்போதும் உண்டு.

அந்த வட்டத்துக்குள் நெருக்கியடித்தபடி நானும் அடக்கம்.

எப்படியும் ஒருமுறையாவது அவரைச் சந்தித்து

விட வேண்டும் என்ற ஆவல்.

கரை மீறிய அலையாய்….எப்போதும் நெஞ்சில்….

2001 – 2002  ஆம் ஆண்டுகளில் www.worldtamilnews.com

சிந்தாதிரிப்பேட்டை அலுவலகத்துக்கு “அம்மா” வந்தார்கள்.

பரவச அனுபவத்தோடு பார்க்க மட்டுமே முடிந்தது.

பேச வாய் எழவில்லை சிறிது நேரம்.

முறையான அறிமுகப்படலம் முடிந்த பிறகு

இயல்பாக அருகே வந்து வாஞ்சையோடு

வாழ்த்துச் சொல்லி ஆசிர்வதித்தார்கள்.

இன்றும் பசுமையாய் அந்நினைவு

நெஞ்சில் நிலாவெளிச்சம் தருகிறது.

பிரசாந்த் நடித்த “மஜ்னு” திரைப்படத்தின்

பாடல் ஒலிநாடா வெளிவந்த வேளை அது.

ராஜேஸ்வரி அம்மா. மூத்த ஒலிபரப்பாளர் அப்துல் ஜப்பாருடன்,

நானும் இணைந்து அறிமுக நிகழ்ச்சி படைத்தது

என் ஒலிபரப்புப் பயணத்தில் மறக்க முடியாத மைல் கல்.

அந்தச் சந்திப்புக்குப் பிறகு அவரை

மீண்டும் காணும் பாக்கியம் வாய்க்கவில்லை.

இறைவன் இம்மண்ணில் அவருக்கு விதித்திருந்த

காலக்கெடு நிறைந்திருக்கலாம்.

அவர் விட்டுச் சென்ற எண்ணச் சுவடுகள்

காற்றுள்ள வரை வான வீதியில் வீசிக்கொண்டே இருக்கும்….

நல்லெண்ணம் விதைக்கும் தென்றலாய்……

எல்லாருக்கும் பொதுவான இறைவன் அவரையும்,

அவருடைய பணிகளையும் பொருந்திக் கொள்ளட்டும்.

Leave a comment

Your email address will not be published.


*