உதறும் சீன அரசு? – உரசும் உய்குர் மக்கள்

 

ஐ எஸ் தீவிரவாதக் குழுவினர் சிரியாவிலும், ஈராக்கிலும் பெரும் தலைவலியைக் கொடுத்து வருகின்றனர். அவர்களை துடைத்தொழிப்பதற்காக அமெரிக்கா தலைமையில் சுமார் அறுபது உலக நாடுகள் அணி திரண்டுள்ளன. எப்போதும் எதிரும், புதிருமாக முட்டிக் கொள்ளும் அமெரிக்காவும், சீனாவும்  தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இப்போது ஓரணியில் இணைந்துள்ளன.

அண்மைக் காலத்தில் சிறுபான்மை உய்குர் (Uighur) முஸ்லிம் குழுக்களால் சீன அரசாங்கத்துக்குச் சிக்கல். உள்நாட்டில் பெருகி வரும் அந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவே பன்னாட்டுத் தீவிரவாத எதிர்ப்புக் கூட்டணியில் சீனா சேர்ந்திருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

சமயத் தீவிரவாதக் குழுக்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் சுமார் 300 சீனக் குடிமக்கள் ஐ எஸ் தீவிரவாதக் குழுவில் இணைந்திருப்பதாகச் சொல்கிறது சீன அரசாங்கம்.

உள்நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது சீனா. குறிப்பாக சின்ஜியாங் (Xinjiang) தன்னாட்சி வட்டாரத்தைத் கழுகுக் கண் கொண்டு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. சின்ஜியாங்கில் சிறுபான்மை உய்குர் முஸ்லிம்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்களை எப்போதுமே சந்தேகத்துடன் பார்க்கிறது சீனா. தீவிரவாத நடவடிக்கை தொடர்பான விசாரணைக்காக நூற்றுக்கணக்கான உய்குர் முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மை முஸ்லிம்களை அடக்கி, அவர்களின் சமய நடைமுறைகளை ஒடுக்கி அச்சுறுத்துவதன் மூலம் நிலைமையைச் சமாளிக்க முனைகிறது சீன அரசாங்கம். ஆனால் அது தேவையற்ற நெருக்கடியை ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

03 china xinjiang map

சீன அரசாங்க நிர்வாகத்தின் கீழுள்ள ஆகப் பெரிய பிராந்தியம் சின்ஜியாங். அதன் எல்லையையொட்டி மங்கோலியா, ரஷ்யா, கஸக்ஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய எட்டு நாடுகள் அமைந்துள்ளன. அண்மைக் காலம் வரை சின்ஜியாங்கில் பெரும்பான்மையாக வசித்து வருவது உய்குர் முஸ்லிம்கள். வாழ்விலும், வாக்கிலும் இஸ்லாம் அவர்களின் அடையாளம்.  துருக்கி மொழியுடன் இணைந்த கிளை மொழியைப் பேசுகிறவர்கள் உய்குர் முஸ்லிம்கள். ஆனாலும் அவர்கள் தங்களை மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே கருதுகிறார்கள்.

பழங்கால வரலாற்றுச் சுவடுகள் சின்ஜியாங் அவ்வப்போது சுயாட்சிப் பிராந்தியமாகவும், சுதந்திரம் பெற்ற பகுதியாகவும் இருந்துள்ளதைச் சுட்டுகின்றன. முன்னைய கிழக்குத் துர்கிஸ்தான் மாநிலத்தில் அமைந்திருந்த சின்ஜியாங் 1949 ல்  சுதந்திர நாடானாது. ஆனால் சின்னாட்களிலேயே அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக அதிகாரத்துக்குள் கொண்டு வரப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து சின்ஜியாங் சீனா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

1990களில் சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு மத்திய ஆசியாவில் பிரிவினைக்குழுக்களின் எண்ணிகை அதிகரித்தது. குறிப்பாக சுதந்திரமான முஸ்லிம் மாநிலம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. அதை நிறைவேற்றுவதற்காகப் பல குழுக்கள் முளைத்தன; அவை பல்கிப் பெருகிக் கிளைத்தன. விழித்துக் கொண்ட சீன அரசாங்கம் பிரிவினைக் குழுக்களை அடக்கி ஒடுக்க முனைந்தது.

விவசாயமும், வர்த்தகமும் சின்ஜியாங் வட்டாரத்தின் வளம் கொழிக்கும் தொழில்கள். சீனாவின் புகழ்மிக்க பட்டுச்சாலை (Silk Road) சின்ஜியாங்கின் ‘கஸ்கர்’ வட்டாரத்தினூடாகச் செல்கிறது. அது அவ்வட்டாரத்தின் மேன்மைக்கு வித்திட்டது. புதியவர்கள் அந்தப் பகுதியில் குடியேறினர். 2000 மாவது ஆண்டின் கணக்குப்படி “ஹான் சீனர்கள்” (Hon Chinese) சின்ஜியாங் வட்டாரத்தின் நாற்பது விழுக்காடு. இவர்களுடன் ஏராளமாக இராணுவத்தினரும், முறையான பதிவைப் பெறாத கள்ளக்குடியேறிகளும் அவ்வட்டாரத்தில் பெருமளவு வசிக்கின்றனர்.

04 Xinjiang map

சின்ஜியாங் வட்டாரத்தில் மேம்பாட்டுப் பணிகள் துரிதமடைந்துள்ளன. சீனாவின் கிழக்குப் பிராந்தியங்களிலிருந்து வந்த “ஹான் சீனர்கள்” அந்தப் பணிகளில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் இளையர்கள். கல்வியிலும், தொழில்நுட்பத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள். பிழைக்க வந்த “ஹான் சீனர்கள்”, காலப் போக்கில் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டு சுகபோகமாக வாழத் தொடங்கினர். இதனால் சிறுபான்மை உய்குர் இனத்தவருக்கு உள்ளூறக் கலக்கம். அவர்கள் தங்கள் சமய, கலாசார வழிமுறைகளைப் பேணித் தொடர்வதில் அதிகச் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. உய்குர் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களுக்கும், சமயப் பள்ளிக்கூடங்களுக்கும் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் அவர்களுக்கு உள்ளூர கடுங்கோபம். பொருளாதார ஏற்றத்தாழ்வு, கலாசார வேறுபாடு – இவ்விரண்டும் சமயக் கலவரங்களுக்குக் காரணமாயின.

05 mother n baby

2014 ஜூலையில், அரசாங்கப் பணிகளில் இருக்கும் முஸ்லிம்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கத் தடை விதிக்கப்பட்டது. சீனாவில் இவ்வாறான ஆணை பிறப்பிக்கப்படுவது புதிதல்ல. முன்னர் பலமுறை நடந்திருக்கிறது. ஆனாலும் இப்போது பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு 2014 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் உய்குர் இனத்தவர் மேற்கொண்டதாக நம்பப்படும் தாக்குதல்களின் எதிர்விளைவாகப் பார்க்கப்பட்டது.

சீன அரசாங்கம் சிறுபான்மை உய்குர் முஸ்லிம்களை ஒடுக்கும் முயற்சிகளைக் காலங்காலமாகச் செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. 1990களில் உரிமைகளைக் கோரி ஊர்வலம் நடத்தியவர்களையும், 2008 பீஜிங் ஒலிம்பிக்கின்போதும் உய்குர் முஸ்லிம்களை சீன அரசாங்கம் ஒடுக்க முற்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றனர் விமர்சகர்கள்.

2009 ல் சின்ஜியாங் வட்டாரத்தில் பெரிய அளவில் சமயக் கலவரம் வெடித்தது. பிராந்தியத் தலைநகரான உரும்சியில் (Urumqi) நடந்த கலவரத்தில் குறைந்தது இருநூறு பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் அதிகமானோர் “ஹான் சீனர்கள்” என்கிறது அரசாங்கத்தின் செய்திக்குறிப்பு. பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது. சந்தேகத்துக்கிடமான உய்குர் முஸ்லிம்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனாலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக அவ்வப்போது வன்முறை வெடித்துக் கொண்டேயிருந்தது.

2012 ஜூனில் ஹோட்டானிலிருந்து (Hotan) உரும்சிக்குச் செல்லவிருந்த விமானத்தைக் கடத்த முயன்றதாக உய்குர் முஸ்லிம்கள் அறுவர் கைது செய்யப்பட்டனர். அதே ஆண்டு ஷான்ஷான் வட்டாரத்தில் மற்றோர் இரத்தக்களரி. ஆயுதமேந்தியவர்கள் அரசாங்கக் கட்டடங்களுக்குள் புகுந்து அத்துமீற முயன்றனர். அவர்களைத் தடுப்பதற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகச் சொன்னது அரசாங்க ஊடகம்.

இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை உரசிப் பார்த்து உரக்கச் சொல்வது வெளிநாட்டு ஊடகங்களுக்குச் சிம்ம சொப்பனமாயிற்று. காரணம், எந்தவொரு வெளிநாட்டு ஊடகத்தினரும் அவ்வட்டாரத்திற்கு எளிதில் செல்ல முடியவில்லை.  ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் அவர்களால் அங்கு சென்று சுதந்திரமாகத் தகவல்களைச் சேகரிக்க முடியவில்லை.

அமைதியான முறையில் தங்கள் சமயப் பொறைகளைப் பின்பற்றி வாழும் உய்குர் முஸ்லிம்கள் “பிரிவினைவாதிகள்”, “முறைகேடான சமயத்தைப் பின்பற்றுவோர்” என்று முத்திரை குத்தப்பட்டதாகச் சொல்கிறது 2013 அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பின் அறிக்கை.

06 uighur police

சென்ற ஆண்டு சின்ஜியாங் வட்டாரத்தில் பல வன்முறைச் சம்பவங்கள். மார்ச் 1, 2014 ல் குன்மிங் ரயில் நிலையில் கத்திக்குத்துத் தாக்குதல்.

ஏப்ரல் 30, 2014 ல் உரும்சி மத்திய ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பும், கத்திக் குத்தும் அரங்கேறின.

மே 22, 2014 ல் உரும்சி திறந்த வெளிச் சந்தையில் குண்டு வெடிப்பு. முன்னைய தாக்குதல்களை விட இந்தத் தாக்குதல்களில் தீவிரவாதிகளின் “தொழில்நுட்பக் கைவரிசை” மிளிர்ந்தது.

சமய நடைமுறைகளை ஒடுக்குவதற்கு சீன அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் பிடிக்கவில்லை என்பதே தாக்குதல்களுக்கு அடிப்படைக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

எவ்வளவு நாட்களுக்குத்தான் சின்னச் சின்னத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பது. ஏதாவது பெரிதாகச் செய்து உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பது உய்குர் இனத்தின் தீவிரப் போக்குடையவர்களின் எண்ணம். அதைச் செயல்படுத்தும் நோக்கிலேயே பொதுமக்கள் கூடும் இடங்களில் கைவரிசையைக் காட்டத் தொடங்கியிருக்கலாம் என்று சொல்கின்றனர் ஆய்வாளர்கள்.

தொடரும் வன்செயல்களை நிறுத்துவதற்கு  தீவிரவாதத்தின் தாக்கம், விளைவு பற்றி விழிப்புணர்வூட்டும் பிரசார இயக்கங்களை மக்களிடம் முன்னெடுத்துச் சென்றது சீன அரசாங்கம். தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.  தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படும் சந்தேக நபர்களின் பட்டியலை வெளியிட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அறிவித்தது அரசாங்கம்.

உய்குர் இனத்தின் புகழ்பெற்ற கல்வியாளர் இல்ஹாம் டோத்தி (Ilhan Dohthi) கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 2014 ல் அவர் மீது பிரிவினைவாதக் குற்றச்சாட்டைச் சுமத்தியது சீன அரசாங்கம். அது அனைத்துலக விமர்சனத்தைக் கிளப்பியது.

ETIM East Turkestan Islamic Movement கிழக்குத் துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், TIM Turkestan Islamic Party துர்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சி – இவ்விரண்டும் உய்குர் முஸ்லிம்களுக்குத் தோள் கொடுத்துத் தூண்டி விடுகின்றன என்று குற்றஞ்சாட்டுகிறது சீன அரசாங்கம். அதை அரசியல் கவனிப்பாளர்கள் மறுக்கின்றனர்.

1990 முதல் 2000மாவது ஆண்டின் தொடக்கம் வரையே ETIM முனைப்பாகச் செயல்பட்டது. 2003 ல் பாகிஸ்தான் இராணுவம் வசிரிஸ்தானில் நடத்திய வேட்டையில் ETIM தலைவர் ஹஸன் மஃசூம் (Hasan Mausum) கொல்லப்பட்டார். 2005 ல் தான் TIM கிளைத்தெழுந்தது. வடக்கு வசிரிஸ்தான் அவர்களின் களம். 200 முதல் 400 கிளர்ச்சியாளர்களே TIM ல் இருக்கின்றனர்.

பாகிஸ்தான் தலிபான்கள், IMU Islamic Movement Uzbekistan உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் ஆகியன அவர்களுக்குப் பயிற்சியளித்ததாகச் சொல்லப்படுகிறது. ETIM & IMU இவ்விரு இயக்கத்தினருக்கும் இடையே சீனாவில் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிக் கருத்து முரண்பாடுகள் இருப்பதைச் சுட்டுகின்றனர் விமர்சகர்கள். சின்ஜியாங் வட்டாரத்துக்கான சீன அரசாங்கத்தின் கொள்கைகள் வன்முறைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

??????????????

இந்நிலையில், ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான பன்னாட்டுக் கூட்டுப்படையில் இணைந்திருப்பதன் மூலம் உள்நாட்டில் சிறுபான்மை உய்குர் இனத்தவருக்கு எதிரான தனது நிலைப்பாட்டை சீனா நியாயப்படுத்த முயல்வதாகச் சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையின் கீழ், ஈராக்கில் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்வதென இன்னும் தீர்மானிக்கவில்லை என்று சீன இராணுவம் தெரிவித்துள்ளது.

02 Uighur Baby

ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுடன் வலுவான உறவைப் பேணி வரும் சீனா ஈராக்கில் அவ்வளவு சீக்கிரத்தில் களமிறங்கி விடாது. ஆனால் ஆசிய வட்டாரத்தில் தானொரு வலுவான சக்தி என்பதை நிரூபிக்கும் நோக்கில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பங்காற்ற சீனா முடிவெடுத்திருக்கலாம். அனைத்துலக அளவில் தீவிரவாதத்தை எதிர்ப்பதைச் சாக்காக வைத்துக் கொண்டு, உள்நாட்டில் சிறுபான்மை உய்குர் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைத் தொடருவதற்கும் இது கைகொடுக்கக்கூடும். எனவே இது சீனாவின் அரச தந்திர நடவடிக்கை என்றும் சிலர் சொல்கின்றனர்.

Leave a comment

Your email address will not be published.


*