ஆ……..ப்கானிஸ்தான் அமைச்சரவை!

ஆப்கானிஸ்தானின் (GDP) மொத்த உள்நாட்டு உற்பத்தி? முக்கியமான விளைபொருள் எது?

ஒரு வழியாக ஆப்கானிஸ்தானின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் 29 ல் அதிபராகப் பொறுப்பேற்றார் அப்துல் கனி. மூன்று மாதங்களுக்குப் பிறகே 25 பேரைக் கொண்ட அமைச்சரவையை அவரால் அமைக்க முடிந்துள்ளது.

      பரம வைரிகளாக வரிந்து கட்டிக் கொண்டிருந்த அதிபர் அப்துல் கனியும், தலைமை நிர்வாக அதிகாரி அப்துல்லாஹ் அப்துல்லாஹ்வும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் சமரசத்துக்கு இணங்கினர். அதில் அமெரிக்காவுக்குப் பெரும்பங்குண்டு.

      ஆப்கானிஸ்தானின் புதிய அமைச்சரவை அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. அமைச்சர்களில் அதிகமானோர் புதுமுகங்கள்.  பொதுமக்களுக்கு அறிமுகமில்லாதவர்கள் பலர். பெண்கள் விவகாரம், கலாசாரம், உயர்கல்வி ஆகிய மூன்று துறைகளுக்கு மட்டும் பெண்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் தேசிய வங்கி, ஆப்கானிஸ்தான் தேசியப் பாதுகாப்பு இயக்குநரகம் ஆகியவற்றுக்கும் புதிய தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.

      தாலிபான்களையும் அமைச்சரவையில் இணைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். அது மெய்யா? பொய்யா? புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் முன்கதைச் சுருக்கம்.

05 ghani-abdullah

      ஆச்சர்யங்களும், புதிர்களும் நிறைந்தது ஆப்கானிஸ்தான் அரசியல் களம். ஜூன் 14, 2014 ல் அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. அப்துல் கனி, அப்துல்லாஹ் அப்துல்லாஹ் இருவரும் முன்னணி வேட்பாளர்கள். எட்டு மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். அனைத்துலகப் பார்வையாளர்களின் முன்னிலையில் நடந்து முடிந்தது தேர்தல். வாக்களித்தால் வேட்டு வைப்போம் என்ற தாலிபான் ஆதரவுப் படையினரின் பாச்சாஆப்கனிஸ்தான் மக்களிடம் பலிக்கவில்லை. ஆங்காங்கே சிறு சிறு முட்டல், மோதல்; அவ்வளவுதான். பெரிய அசம்பாவிதங்கள் இல்லை. சுமுகமாக முடிந்தது தேர்தல்.

      பிறகு அரங்கேறின சுவாரசியமான திருப்பங்கள். அதிபர் வேட்பாளர்கள் அப்துல் கனி, அப்துல்லாஹ் அப்துல்லாஹ் இருவருக்கும் இடையே இழுபறி. தேர்தல் முறையாக நடக்கவில்லை; ஏகப்பட்ட குளறுபடிகள்; முறைகேடுகள்; நியாயம் கிடைக்கும் வரை அடுத்த கட்டத்துக்கு நகரப் போவதில்லை என்று இரு தரப்பும் அடம்பிடித்தன. ஒருவருக்கொருவர் குழி பறிக்கத் திரைமறைவில் பல நாடகங்கள். தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலானது. அதிபர் யார் என முடிவு செய்வதில் நீடித்தது இழுபறி.  

06 Ashraf-Ghani-abdul_2912090b

      ஆப்கானிஸ்தான் முரண்டு பிடித்தால் அமெரிக்காவுக்கு ஆகுமா? பதறிப்போனது அமெரிக்கா. ஒருமுறையல்ல, இருமுறை சமரசம் செய்து வைக்கப் பறந்து வந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி. “கிடப்பதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையில் வை” என்பதுதானே அமெரிக்காவின் அரசியல் சமன்பாடு“. ஆப்கானிஸ்தான் முன்னைய அதிபர் ஹமீத் கர்ஸாய் துணையுடன் சமரசச் சாலைக்கு வித்திட்டார் ஜான் கெர்ரி.

04 John kerry afghanistan

      அமெரிக்கா கோடு போட்டால், ரோடு போட வேண்டியது ஆப்கானிஸ்தானின் பொறுப்பல்லவா? முட்டிக் கொண்டு நின்ற அதிபர் வேட்பாளர்கள் பட்டென விலகினர். ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்தனர். சத்தமில்லாமல் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். அதன்படி, அதிபர் பொறுப்புக்கு அப்துல் கனி. நாட்டின் தலைமை நிர்வாகிக்கு (CEO) அப்துல்லாஹ் அப்துல்லாஹ்.

தலைமை நிர்வாகி,  ஆப்கானிஸ்தான் அரசாங்க நிர்வாகத்துக்குப் புத்தம் புதிது. ஏறக்குறைய பிரதமர் பதவியைப் போன்றது. இதுவரை அப்படியொரு பதவி அங்கில்லை. இது சமரசத்தில் பூத்த சங்கட நாற்காலிப் பூ“. ஆஹா…! இதுவல்லவோ சமரச உடன்பாடு என்று உள்ளம் குளிர்ந்து உச்சி முகர்ந்தது அமெரிக்கா.

30 afghanistan candidates

      ஆப்கானிஸ்தானின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் நிறைந்து வாழும் பஷ்டுன்இனத்தவரின் ஆதரவு அப்துல் கனியின் பெரும்பலம். வடக்கிலும், இன்னபிற பகுதிகளிலும் வாழும் தஜிக்இனக்குழுவினர் அப்துல்லாஹ்வின் நம்பிக்கையாளர்கள். ஹமீத் கர்ஸாய் தலைமையிலான முன்னைய அரசாங்கத்தில் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான இனக்குழுக்களுக்குப் போதுமான விகிதாசாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் அரசு நிர்வாகத்தில் அதிக முட்டல், மோதல் இல்லை. புதிய அரசாங்க அமைச்சரவையிலும் கிட்டத்தட்ட ஒரு சமரச வழி காணப்பட்டுள்ளது. முன்னைய அதிபர் ஹமீத் கர்ஸாய் அதில் முக்கியப் பங்காற்றினார்.

ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகை 31.3 மில்லியன். அந்த எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் பெண்கள் மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சராசரியாக ஐந்து பிள்ளைகள். உலகில் அதிகக் குழந்தைப் பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது ஆப்கானிஸ்தான். தாலிபான்கள் மேலாண்மையின்போது சில பகுதிகளில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. இப்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

 

      நாடாளுமன்றத்திலும், அரசாங்கப் பணிகளிலும் கால்வாசிப் பேர் பெண்கள் என்று கணிக்கிறது (Charity Islamic Releif) இஸ்லாமிய நிவாரணத் தொண்டு அமைப்பு. 2009 ல் ஆண்களை விடப் பெண்கள் சீக்கிரமாகவே அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் 2020 க்குள் வேலை செய்யும் பெண்களின் விகிதம் நாற்பது விழுக்காடாகும் என்கிறது ஓர் ஆய்வு.

      காவல்துறையிலும், இராணுவத்திலும்கூட இப்போது பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான இராணுவப் பயிற்சி நிலையத்தை அமைத்துள்ளது பிரிட்டன். ஆண்டுதோறும் குறைந்தது 100 பெண்களுக்காவது இராணுவப் பயிற்சியை வழங்கிட வேண்டுமென்பது இலக்கு. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், அவர்களைக் கட்டாயத் திருமணத்தில் தள்ளுவதும் வெகுவாகக் குறைந்துள்ளது. பல்வேறு சமூகப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.

AS Afghanistan

பல்வேறு கடினமான சூழலில் புலம் பெயர்ந்த ஆப்கானியர்கள் இப்போது படிப்படியாகத் தாயகம் திரும்புகின்றனர். உலகில் மீண்டும் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்புவோரை அதிகம் ஈர்க்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது ஆப்கானிஸ்தான். தாலிபான்களின் வீழ்ச்சிக்குப் பிறகு சுமார் ஆறு மில்லியன் பேர் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பியிருப்பதாகச் சொல்கிறது ஐக்கிய நாட்டு அகதிகள் நலவாழ்வு அமைப்பு. இன்னும் இரண்டு மில்லியன் பேர் தாயகம் திரும்புவதற்கான உதவிகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

      ஆப்கானிஸ்தான் மக்கள்தொகையில் 78.6 விழுக்காட்டினர் விவசாயத்துடன் தொடர்புடையவர்கள். ஆனால் எதை விளைவிக்கிறார்கள்? என்று கேட்டால் ஆச்சர்யத்தில் விழிகள் அகல விரியும்.

01 Opium afghan

      ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய ஏற்றுமதி வணிகம் ஓபியம் போதைப் பொருள்!. “காணி நிலம் கிடைத்தால் போதும் கையளவு விதைத்துப், பையளவு அறுத்துக் கொள்வார்கள்“. 2103 ல் சென்ற உலகின் மொத்த ஓபியம் உற்பத்தியில் 90 விழுக்காடு ஆப்கானிஸ்தானில் விளைந்தது. போதை!, போதை!!, போதை!!!. பிறகு போனால் போகட்டும் போடா என்று பழங்கள், பாதாம் பயிரிடுகிறார்கள். சில இடங்களில் கம்பளித் தரை விரிப்புகளைத் தயார் செய்கிறார்கள்.

02 afghanistan opium production

 

 

     2001 முதல் 20013 வரையுள்ள பதின்மூன்றாண்டுகள் அதிபராக இருந்தார் ஹமீத் கர்ஸாய். அவருடைய ஆட்சிக் காலத்தைச் சற்றுத் திரும்பிப் பார்க்கலாமா?

      2001 ல் தாலிபான்களின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார் ஹமீத் கர்ஸாய். பதின்மூன்று ஆண்டுகள் பஞ்சாய்ப் பறந்தன. பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டுவது போல அரியணை நாட்களை அசாதாரணமாகக் கடந்தார் கர்ஸாய். அவரைப் போன்ற விசுவாசமான சகா அமெரிக்காவுக்குக் கிடைத்தது அந்நாட்டின் தந்திரபுண்ணியம்“. 2001 ல் அமெரிக்க, நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டனர்.

புகழ்மிக்க பஷ்டுன்இனத்திலிருந்து வந்த கர்ஸாய் நிலைமையைத் திறமையாகச் சமாளித்தார். அமெரிக்கா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் பயின்ற கல்வி அவருக்குக் கை கொடுத்தது. ஆப்கானின் பாரம்பரியமும் தெரியும், மேற்குலகின் நாகரிகமும் அவருக்குத் தெரியும். இப்படிப்பட்ட ஒருவரை தாலிபான்களுக்குப் பிடிக்குமா? ஆகவே ஆகாது!.

03 Karzai

ஹமீர் கர்ஸாயக்கு நல்ல காலம்! ஆயுசும் கெட்டி!!.  

ஆறு முறை தீவரவாதத்  தாக்குதல்களிலிருந்து தப்பிப் பிழைத்திருக்கிறார் கர்ஸாய்!!!.

      2013 ல் ஆப்கானிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)  45.3 பில்லியன் அமெரிக்கா டாலர். 2001 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அது இருமடங்கு. 2012 ல் மட்டும் ஆப்கானிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 12.5 விழுக்காட்டைத் தொட்டது. அது எவரும் முன்னுரைக்காத புதிய உச்சம். கலாசார, சுகாதாரத்துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.

ஆரம்பப் பள்ளிகளில் கல்விக்காகப் பதிவு செய்துகொண்ட பிள்ளைகளின் விகிதம் 97 விழுக்காடானது. 2001 ல் அந்த விகிதம் வெறும் 21 விழுக்காடுதான். இவையனைத்தும் கர்ஸாய் ஆட்சியில் விளைந்த நற்பயன்கள். அவருடைய நீக்குப்போக்கான வெளிநாட்டுக் கொள்கை நாட்டுக்குச் சுபிட்சத்தைக் கொண்டு வந்தது. நாட்டை முன்னேற்ற அதிக நிதி தேவை. அதற்கு மேற்குலக நாடுகளுடன் அணுக்கமாகவும், இணக்கமாகவும் செயல்பட வேண்டும். அதேவேளை, ஆசிய வட்டாரத்தின் சீனா, இந்தியா, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நேசத்தை வளர்த்துக் கொண்டார் கர்ஸாய். அது அவருக்கு நற்பெயரை ஈட்டிக் கொடுத்தது.

      என்னதான் பெருமைகள் இருந்தாலும், ஆப்கானிஸ்தான் அரசியலில் அதிகாரம் செலுத்துவது எளிதல்ல. இடியாப்பச் சிக்கல் நிறைந்தது. நாட்டின் பொருளாதாரம் இன்னமும் வெளிநாட்டு உதவிகளை நம்பித்தான் இருக்கிறது. பாதுகாப்பு நிலைமை இன்னும் முழுமையாக மேம்படவில்லை. எங்கு, எப்போது என்ன நடக்கும் என்று கணித்துச் சொல்ல முடியாத நிலை.

      தாலிபான்கள் கொஞ்சம் அடங்கியிருந்தால் வரும் நாட்களை சுமுகமாகக் கழிக்கலாம் என்று நினைத்தார் புதிய அதிபர் அப்துல் கனி. அமைச்சரவையில் அவர்களையும் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

      தாலிபான்களுக்கு முன்மொழியப்பட்டதாகச் சொல்லப்படும் அமைச்சு கிராமப்புற விவகாரத்துறை (Rural Affair). எல்லைப்புறம், சுங்க வரி வசூலிப்பு, மக்காவுக்குச் செல்லும் புனிதப் பயணம் ஆகியன அந்தத் துறையின் கீழ் வரும் முக்கியமான பணிகள்.

      ஆப்கானிஸ்தானின் தெற்கு வட்டாரத்தில் அமைந்துள்ள நிம்ருஸ், கந்தஹார், ஹெல்மாண்ட் ஆகிய பிராந்தியங்களுக்கான ஆளுநர் பதவிகளையும் தாலிபான்களுக்கு வழங்க முன்வந்திருக்கிறது அதிபர் அப்துல் கனியின் நிர்வாகம். ஆனாலும் இந்த வசியத்துக்கு மசியவில்லை தாலிபான்கள்.

      ஆப்கானிஸ்தானின் தெற்கு வட்டாரம் தாலிபான்களின் முக்கியமான களம். நேட்டோ கூட்டுப்படையின் பெரும்பான்மை வீரர்கள் அங்கே நிலைகொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தாலிபான்கள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் இதுவரை கொல்லப்பட்ட பிரிட்டிஷ் படையினரின் எண்ணிகை நானூற்றுக்கும் அதிகம். ஆப்கானிஸ்தானின் தெற்குப் பிராந்தியத்தில் தாலிபான்களை முற்றாக ஒடுக்குவது நேட்டோ படையினருக்கே இன்னும் மிகப் பெரிய சவால்.

      அரசாங்கத்தில் இணையும்பட்சத்தில் வெளிநாட்டுப் படையினர் விவகாரத்தில் சமரசப்போக்குடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கலாம் என்ற தாலிபான்களின்  எச்சரிக்கை உணர்வைப் புறந்தள்ளி விட முடியாது. அது மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் தேவை, தாலிபான்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற நெளிவு,சுழிவான சட்ட நடைமுறை அவசியம் என்ற அவர்களின் விருப்பத்தையும் சுட்டுகின்றனர் சில அரசியல் பார்வையாளர்கள்.

      முன்னைய அதிபர் ஹமீத் கர்ஸாயை விடத் தாம் வித்தியாசமானவர், முற்போக்கானவர் என்று காட்டிக் கொள்ள விழைகிறார் தற்போதைய அதிபர் அப்துல் கனி. அதற்குச் சிறந்த உதாரணம் தாலிபான்களை அரசாங்கத்தில் இணைக்கும் அவருடைய திட்டம் என்கின்றனர் சில விமர்சகர்கள். அப்துல் கனியின் ஆதரவாளர்கள் அதை மறுக்கிறார்கள்.

      பாகிஸ்தானுடன் இணக்கமான அணுகுமுறையை விரும்புகிறார் அப்துல் கனி. பதவியேற்ற கொஞ்ச நாட்களுக்குள் இஸ்லாமாபாத்துக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டதையும், பாகிஸ்தான் பிரதிநிதிகள் பலர் காபூல் வந்து சென்றதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். பாகிஸ்தானுடனான நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் அந்நாட்டுக்கு அணுக்கமான சீனா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளையும் அழைத்துப் பேசி நிலைமையைச் சீராக்க முனைகிறார் அப்துல் கனி.

      இவை ஒருபுறமிருக்க, 2001 ல் அதிபராகப் பொறுப்பேற்ற ஹமீத் கர்ஸாய் என்னவெல்லாம் செய்தாரோ, அதே பாதையில் சற்று விலகாமல் அடியெடுத்து வைக்கிறார் அப்துல் கனி என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அமைச்சரவையை அமைப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டார் கர்ஸாய். அது நாட்டில் பல பிரச்சினைகள் முளைக்கவும், பெரிய அளவில் கிளைக்கவும் வழி செய்தது. நாட்டின் பொருளாதாக முன்னேற்றத்தைக் கடுமையாகப் பாதித்தது என்பதையும் அவர்கள் சுட்டுகின்றனர்.

      தேர்தல் பிரசாரத்தின்போது வாக்களிக்கப்பட்ட அம்சங்கள் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்காணிக்க ஓர் உள்நாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அது வெளியிடும் தகவல் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. தேர்தல் பிரசாரத்தில் வாக்களிக்கப்பட்ட சுமார் 83 அம்சங்கள் பற்றி இன்னும் எவரும் வாய் திறக்கவில்லை. நான்கே நான்கு வாக்குறுதிகள் மட்டுமே முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

 நாட்டின் பாதுகாப்புக்குப் பங்கம்  வராமலிருக்க அமெரிக்காவுடன் இருதரப்புப் பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டார் புதிய அதிபர் அப்துல் கனி. 2014 டிசம்பருக்குப் பிறகும்   சுமார் பதின்மூவாயிரம்  அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானில் நீடித்திருக்க வகை செய்கிறது அந்த உடன்பாடு. ஆப்கானிஸ்தான் இராணுவத்தினருக்குப் பயிற்சியளிப்பது மட்டுமே அங்கிருக்கப்போகும் அமெரிக்க இராணுவத்தின் பணி என்று சொல்லப்பட்டுகிறது. அமெரிக்கா சொன்னால் அதை அப்படியே நம்பித்தானே ஆக வேண்டும்.

10 afghan child

Leave a comment

Your email address will not be published.


*