பலுசிஸ்தான் கள்ளச் சந்தை
2014 ல் பலுசிஸ்தான் வழியே மட்டும் கடத்தப்பட்டுள்ள போதைமிகு அபினின் (Heroin) மதிப்பு ஒன்றரை பில்லியன் டாலர்.
பாகிஸ்தானின் மிக ஏழ்மையான மாநிலம் பலுசிஸ்தான். போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கோ அது சொர்க்க பூமி. கணினி முதல் கையெறி குண்டுகள் வரை … என்ன வேண்டுமோ வாங்கலாம். விலை அதிகமோ? இல்லவே இல்லை. சல்லிக் காசு கொடுத்தால் சாக்கு மூட்டையில் அள்ளலாம்.
அமெரிக்க, நேட்டோ கூட்டுப்படைகளிடமிருந்து களவாடப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள், எரிபொருள், வாகனங்கள் ஆகியன பலுசிஸ்தான் சந்தையில் விற்கப்படுகின்றன. வளைகுடா நாடுகளிலிருந்தும், ஈரானிலிருந்தும் கொண்டு வரப்படும் கடத்தல் பொருட்களின் வர்த்தகம் ஐரோப்பா வரை பரவியிருக்கிறது.
1160 கிலோ மீட்டர் தூரம் கொண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும்.
பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம். ஆனாலும் உறவினர்கள் உதவியோடு அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுக் கடத்தல் பொருட்கள் பலுசிஸ்தான் சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
போதைப் பொருட்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், உணவு, உடை, மின்னியல் சாதனங்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் மனிதர்களும் கடத்தி வரப்படுகின்றனர். இதைத் தடுப்பதற்காகப் பாகிஸ்தான் பகுதியில் சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றுக்காவலில் ஈடுபடுகின்றனர். ஆனாலும் அதிகம் பயனில்லை.
ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல, ஈரானிலிருந்தும் எரிபொருளும் கடத்தப்படுகிறது. சந்தையின் எல்லா மூலைகளுக்கும் எல்லாரும் போய் விட முடியாது. சில இடங்களுக்கு முறையான பரிந்துரை அவசியம்.
ஆயுதங்கள் வாங்க வந்தவர் சொல்லும் தகவல்களை உறுதிப்படுத்தி, அவர்கள் மீது நம்பிக்கை வந்தால் மட்டுமே வந்தவர்களுக்கு வந்தனம். இல்லையென்றால் தப்பிப் பிழைப்பதே தம்பிரான் புண்ணியம். எனவே, எங்கே என்ன கிடைக்கும்? எப்படி வாங்கலாம்? என்பதை முறையாகத் தெரிந்து வைத்துக்கொண்டால் வளமான வர்த்தகம் சாத்தியம்.
2014 ல் பலுசிஸ்தான் வழியே மட்டும் கடத்தப்பட்டுள்ள போதைமிகு அபினின் (Heroin) மதிப்பு ஒன்றரை பில்லியன் டாலர் என்கிறது உலக நிறுவனத்தின் போதைப்பொருள் ஒழிப்புத்துறை.
இவ்வட்டாரத்தில் வேறெந்தத் தொழில்வாய்ப்பும் இல்லை. நாட்டின் மற்ற பகுதிகளை விட இங்கு வேலையின்மை விகிதம் மும்மடங்கு அதிகம்.
பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிகள் தொடர்வதாகச் சொல்கிறது பாகிஸ்தான் அரசாங்கம். ஆனால் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையே மோதல் வலுத்திருப்பதால் அது கேள்விக்குறியாகி விட்டது.
வறுமை, வேலையின்மை, சமூகப், பொருளியல் ஏற்றத்தாழ்வு. இவை இங்குள்ள மக்களின் வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளன.
மக்கள் நலம் பேணும், ஊழலற்ற நிர்வாகம் அமைந்தால் நிலைமை மேம்படலாம்.
Leave a comment