தீவிரவாதிகளுக்கு எதிரான போர் சாதிக்குமா “ஜோர்”தான்?

கடந்த பத்து நாட்களில் சிரியாவிலுள்ள ஐ எஸ் தீவிரவாதிகளின் 56 நிலைகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது ஜோர்தான். சிரியாவின் ரக்கா நகரிலுள்ள ஐ எஸ் தீவிரவாதிகளின் தளவாட நிலையம், ஆயுதப் பரிவர்த்தனை நிலையம் ஆகியன அழித்தொழிக்கப்பட்டன.

உச்ச கட்டக் கோபத்தில் உக்கிரமாகக் கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது ஜோர்தான். எப்படியாவது ஐ எஸ் தீவிரவாதிகளைக் கருவறுத்து விட வேண்டும் என்பது அவர்களின் இலக்கு. ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கக் கூட்டணியில் ஜோர்தானும் இடம்பெற்றுள்ளது. ஆனால் கொஞ்சநாள் முன்புவரை அது அந்தக் கூட்டணியில் இருக்கும் சுவடே தெரியவில்லை. இப்போது அடிபட்ட வேங்கையாய்ப் பாயத் தொடங்கியுள்ளது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த நிலை ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு. ஜோர்தானைச் சேர்ந்த விமானியை உயிருடன் கொளுத்தியதற்கு வினையை அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Jordan Border

          ஐ எஸ் தீவிரவாதிகளின் நிலைகளைக் குறிவைத்து மூன்று நாட்களுக்குள் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆகாயத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது ஜோர்தான். இந்தப் பூமிப்பந்திலிருந்தே ஐ எஸ் தீவிரவாதிகளைத் துடைத்தொழிக்கும் ஆற்றல் தங்களுக்கு இருப்பதாக மார்தட்டுகிறார் ஜோர்தான் ஆகாயப்படைத் தலைவர் ஜெனரல் மன்சூர் அல் ஜப்ர். தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து அவர்களைத் தீர்த்துக் கட்டுவோம் என்று முழங்குகிறார் ஜோர்தான் உள்துறை அமைச்சர் ஹூஸைன் அல் மாஜிதி.

கடந்த பத்து நாட்களில் சிரியாவிலுள்ள ஐ எஸ் தீவிரவாதிகளின் 56 நிலைகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது ஜோர்தான். சிரியாவின் ரக்கா நகரிலுள்ள ஐ எஸ் தீவிரவாதிகளின் தளவாட நிலையம், ஆயுதப் பரிவர்த்தனை நிலையம் ஆகியன அழித்தொழிக்கப்பட்டன.

Jordan

நாளாக, நாளாக ஜோர்தானுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் முழுமையான ஆற்றல் அந்நாட்டுக்கு இருக்கிறதா?.

ஜோர்தானின் ஆகாயப்படை அரதப் பழசு. இன்றைய நவீன ஆயுதங்கள் ஏதும் அதனிடம் இல்லை. தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் F16 விமானம் 25 ஆண்டுகளாக ஆகாயப் படையின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வீசப்படும் குண்டுகள் எல்லாம் பழைய பட்டாசுகள், வெத்து வேட்டுக்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

ஜோர்தானுக்கு அருகிலுள்ள இஸ்ரேலுக்கு இந்தத் தலைவலி இல்லை. அந்நாட்டிடம் இன்றைய காலத்துக்கேற்ற நவீன ஆயுதங்கள் உள்ளளன. அமெரிக்கத் தோழன் மூலம் சகல சம்பத்துக்களையும் பெற்ற பெரியண்ணனாகத் திகழ்கிறது இஸ்ரேல். 2007 ல் அமெரிக்காவுடன் இஸ்ரேல் செய்து கொண்ட ஒப்பந்தம் அதன் எதிர்காலச் சங்கடங்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெற்றுத் தரும். அவ்வப்போது அமெரிக்காவிடமிருந்து தேவையான இராணுவப் பயிற்சிகளையும் இஸ்ரேல் பெற்றுக் கொள்ளலாம்.

ஈராக், எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் அமெரிக்காவிடமிருந்து தற்போது இராணுவப் பயிற்சிகளையும், ஆயுதங்களையும் பெற்று வருகின்றன. ஆனால் ஜோர்தானுக்கு அப்படியேதும் கிடைப்பதில்லை. இனி இந்த நிலை மாறக்கூடும். அது சீக்கிரமாகவே நடக்க வேண்டும் என்கிறார் ஜோர்தான் ஆகாயப்படையின் ஓய்வுபெற்ற விமானி மேஜர் ஜெனரல் மஃமூர் அபூ நுவ்வார்.

தற்போது ஜோர்தானுக்குப் போதாத காலம். நெருக்கடிகள் அதிகம். ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையைத் தொடர ஜோர்தானுக்கு உடனடினாயாகப் பில்லியன் டாலர் நிதியும், ஆயுதங்கள், ஆளில்லா விமானங்கள், நவீனத் திறன் குண்டுகள் (smart bombs) தேவை. அதை நன்கு அறிந்திருந்தும், பாராமுகமாய் இருக்கிறது அமெரிக்கா.

வேவுத்துறையிலும், தற்காப்புத் துறையிலும் ஜோர்தானுக்கு அவரசமான உதவிகள் தேவை. எதிரிகளின் நிலைகளுக்கு மேல் எங்கள் விமானங்கள் பறந்தால் அவர்களுக்குக் குலைநடுக்கம் வரவேண்டும். ஆழிப்பேரலையைப் போல, வானமே இடிந்து விழுவதைப் போல எல்லாத் திக்குகளிலிருந்தும் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும். இப்போதைக்கு அதுவே மிக மிக முக்கியம் என்கிறார் மேஜர் ஜெனரல் மஃமூர்.

ஜோர்தானுக்குத் தேவையான ஆயுத உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் சூசகமாகக் கோடி காட்டியுள்ளனர். ஆனால் இஸ்ரேலுக்குக் கொடுப்பதைப் போல வலிமையான நவீன ஆயுதங்களை அமெரிக்கா ஜோர்தானுக்குக் கொடுக்குமா? என்று கிலி கிளப்புகின்றனர் மத்திய கிழக்கின் அரசியல் நிபுணர்கள்.

Jordan isrel Flag

அமெரிக்கா எப்போதும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும், நிதியையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இது ஜோர்தானைக் கவனிக்க வேண்டிய நேரம். அதற்குத் தேவையான உதவிகளை வழங்காதபட்சத்தில் தீவிரவாதிகள் இன்னும் முன்னேறக்கூடு என்று இராணுவ உளவு, வெளியுறவுத்துறை ஆய்வாளர் மார்க் பெர்ரி.

அமெரிக்கா, ஜோர்தானுக்குச் செய்யும் எந்த உதவியும் இஸ்ரேலுக்குச் செய்யப்படுவது போலாகாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் இஸ்ரேலிய ஹெர்ட்ஸ் நாளிதழின் உலகச் செய்திப்பிரிவு ஆசிரியர் அஸஃப் ரோனல். ஜோர்தானுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படும் சட்ட விரோதக் கும்பல்களின் கைகளில் சிக்கி விடக்கூடாது என்று அவர் எச்சரிக்கிறார்.

ஐ எஸ் தீவிரவாதிகளின் வளர்ச்சிக்கு அமெரிக்காவும் பொறுப்பேற்க வேண்டும். ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிப்பதற்கு முன்பு ஐ எஸ் என்றோர் அமைப்பே அந்த வட்டாரத்தில் இல்லை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஈராக்கில் நீடிக்கும் நிலையற்றதன்மை ஜோர்தானுக்குப் பெரிய தலைவலி.

ஈராக்குக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகள் பற்றி, ஈராக்கிலும், உலக நாடுகளிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவிடமிருந்து ஈராக் அதிக அளவு ஆயுதங்களைக் கொள்முதல் செய்கின்றன. ஆனால் உள்நாட்டிலேயே அதற்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை.

போர் விவாகரங்களில் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திடம் வலியுறுத்தி வருகிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவருடைய அந்தக் கோரிக்கை மத்திய கிழக்கு வட்டாரத்தின் அமைதிக்கு வலுச்சேர்க்கிறதோ இல்லையோ, அமெரிக்காவின் சொந்தத் தற்காப்பு முயற்சிகளுக்கே கைகொடுக்கும். ஐ எஸ் தீவிரவாதிகளின் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தவோ, அல்லது அவர்களை மொத்தமாக முடக்கவோ இன்னும் நேர்த்தியான அரசதந்திர அணுகுமுறை தேவை. அதை அமெரிக்கா சரியாகவே உணர்ந்திருக்கும் என்று சொல்கின்றனர் விமர்சகர்கள்.

ஐ எஸ் தீவிவராதிகளுக்கு எதிரான போருக்காக ஜோர்தானுக்கு எவ்வளவு நிதி கொடுக்கலாம்? என்றுமில்லாத திருநாளாக இஸ்ரேல், சவூதி அரபியா, துருக்கி, ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகள் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளன. இதை எந்த வகையில் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்? இவையே அமெரிக்கா முன்னுள்ள கேள்விகள்.

ஓராண்டு வரை ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் மும்முரமாக ஈடுபட ஜோர்தானுக்கு ஐந்து பில்லியன் டாலர் நிதி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 1962 லிருந்து இன்று வரை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கி வரும் உதவியை விட இது 100 பில்லியனுக்கும் அதிகம்.

ஐ எஸ் தீவிரவாதிகளின் வீழ்ச்சிக்கு அமெரிக்கா தரப்போகும் விலை எவ்வளவு? சிரியாவில் எந்தவிதமான அரசியல் தீர்வையும் கொண்டு வராமல் செய்யப்படும் உதவிகள் நீண்ட காலப் பலனைப் பெற்றுத் தருமா? இந்தக் கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.

 

 

Leave a comment

Your email address will not be published.


*